[Advaita-l] A Report in Tamil of the Centenary Jayanthi of the earlier Sringeri Jagadguru
V Subrahmanian
v.subrahmanian at gmail.com
Tue Oct 10 13:08:20 EDT 2017
The note below in Tamil is a report of the proceedings in a function at
Chennai in commemoration of the Centenary Jayanti of HH Jagaduru Sri
Abhinava Vidyatirtha Swamiji of Sringeri Peetham.
அன்புடையீர்,
வணக்கம்.
இன்று(08.10.2017) ஞாயிறு மாலை 6.30 மணிக்கு தேஜஸ் பவுண்டஷன், சென்னை
அமைப்பினரால்சிருங்கேரி ஜகத்குரு அனந்தஸ்ரீ விபூஷித ஸ்ரீ அபிநவ வித்யா
தீர்த்த மகாஸ்வாமிகளின் நூற்றாண்டு விழா மயிலாப்பூரில் Y.M.I.A வளாகத்தில்
இருக்கும் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறைவணக்கத்துடன் துவங்கிய
நிகழ்ச்சியில், திரு. முருகானந்தம் வரவேற்புரை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு முன்னாள் நீதியரசர் ராமநாதன் அவர்கள் தலைமை தாங்கி, கலைமகள்
ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் சிருங்கேரி குருநாதர்களைப் பற்றி
எழுதிய "அருள் மழை" என்ற நூலை வெளியிட, முதல் பிரதியை அம்மன் தரிசனம்
ஆசிரியர் ஜெ.எஸ்.பத்மநாபன் பெற்றுக்கொண்டார்.
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட நான்கு ஆம்னாய பீடங்களில் தென்திசைக்குரிய
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் ஆதிசங்கரர் தொடங்கி இன்று வரை அருளாட்சி
செய்து கொண்டு வரும் அத்துணை ஆசார்யர்களுமே ஜீவன் முக்தர்கள் என்று தலைமை
உரையாற்றிய நீதிபதி பக்திப் பெருக்குடன் கூறினார்.
தொடர்ந்து பேசுகையில், அந்த வரிசையில் முப்பத்தைந்தாவது பீடாதிபதியான ஜகத்குரு
ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகள் தனது பதிநான்காவது வயதில் அவரது
குருவான ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகளிடம் சன்யாசம் பெற்றுக்
கொண்டார்.
அந்தக் காலத்திலேயே அவர் யோகக் கலைகள் பலவற்றை பழுதறக் கற்றுத்
தேர்ந்தார். அந்த யோகக் கலைகளை அவரது கனவில் ஸ்ரீ சிவபெருமானே படிப்படியாக
பலதினங்கள் கற்றுத் தந்ததாகவும், தான் தன் கனவு நிலை தெளிந்த பின்பு அந்த
யோகக் கலைகளைப் பயிற்சி செய்து பதினேழு வயதினிலே ஜீவன் முக்தரான செய்தியையும்
அவரது பக்தரான திரு.உ்மேஷ் தனது புத்தகத்தில் பதிவு செய்திருப்பதாகவும்
சொன்னார்.
சிருங்கேரி குருநாதர்கள் சாதி வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும்
அருள்தரும் கருணை உள்ளம் கொண்ட மகான்கள் என்றார்.
ஒருமுறை தென்தமிழ் நாட்டில் விஜய யாத்திரை செய்யும்பொழுது, ஒரு ஊரில்
குருநாதர் தங்குவதற்கு பக்தர் ஒருவரின் வீடு தாயார் செய்யப் பட்டது. அந்த
வீட்டின் உரிமையாளர் ஒரு அந்தணர். அவர் தனது அந்தணர் அல்லாத நண்பர் ஒருவரைத்
தன் வீட்டு மாடியில் குடிவைத்திருந்தார். தன் வீட்டிற்கு சுவாமிகள் வந்து தங்க
இருப்பதால் ஒரு சில நாட்களுக்கு அந்த நண்பரை வேறு ஒரு வீட்டில் தங்கிக்கொள்ளச்
சொன்னார். அந்த நண்பர் காலி செய்தவுடன் அந்த அறையையும் பூட்டி வைத்துவிட்டார்.
சுவாமிகள் வரும் நாளும் வந்தது. அந்த அந்தண பக்தர் சுவாமிகள் தங்குவதற்குத்
தாங்கள் இருத்த வீட்டின் கீழ்ப்பகுதியைத் தந்தனர். சுவாமிகள் அந்த வீட்டின்
உரிமையாளரான அந்தணரைப் பார்த்து," ஏன் இந்த அறையைப் பூட்டி
வைத்திருக்கிறீர்கள்?" என்று கேட்க, அவர் தயங்கியபடி," அங்கே என் நண்பர் தங்கி
இருந்தார். அவர் அந்தணர் இல்லை. நீங்கள் வருவதால் அவரை வேறு வீட்டில் தங்க
வைத்துள்ளேன். அந்த அறையையும் பூட்டி விட்டேன்" என்று சொன்னவுடன், அந்த அந்தண
பக்தரிடம்,' அந்த மாடி அறையைத் திறவுங்கள்" என்றார் சுவாமிகள். அந்த
அறைக்குள் நுழைந்த சுவாமிகள்," நான் இங்கேதான் தங்க விரும்புகிறேன்" என்று
சொல்லி விட்டார். மறுநாள் காலையில் அந்த வீட்டின் உரிமையாளரான அந்தண
பக்தரிடம்,' இங்கே தங்கி இருந்த உங்கள் நண்பரை உடனே இங்கு அழைத்து வாருங்கள்"
என்றார். வந்த நண்பரிடம்," உங்களுக்கு ஏதேனும் மந்திரோபதேசம் ஆகியிருக்கிறதா?
என்று கேட்க, அவர் அப்படி ஒன்றும் இல்லை. நான் தினமும் "ஓம் நமச்சிவாய" என்று
மனத்திற்குள் ஜெபித்துக் கொண்டே இருப்பேன் சுவாமி" என்றார். அதைக் கேட்டவுடன்
," ரொம்ப சந்தோஷம். நீங்கள் இருந்த இந்த அறையில் நல்ல அதிர்வலைகள் இருக்கிறது.
தொடர்ந்து அந்த மந்திரத்தையே ஜெபித்துக் கொண்டிருங்கள். உங்கள் மனம் சாந்தி
பெரும்." என்று அந்த அந்தணர் அல்லாத நண்பரை ஆசீர்வதித்தார் ஸ்ரீ அபிநவ வித்யா
தீர்த்த மகாஸ்வாமிகள். இப்படி இன்னும் எண்ணற்ற நிகழ்வுகள் உண்டு என்று
சொல்லும் பொழுது நீதிபதி இராமநாதன் அவர்களின் கண்கள் பனித்தன.
அம்மன் தரிசனம் ஆசிரியர் திரு.பத்மநாபன் பேசும் பொழுது சிருங்கேரி
ஆசார்யார்களின் கருணையையும், பக்தர்களை உன்னத நிலைக்கு அழைத்துச் செல்லும்
யோகிகள் என்றார்.
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதீ மகாஸ்வாமிகள் தன் சீடர் ஸ்ரீ அபிநவ வித்யா
தீர்த்தருக்கு ஒரு முறை ஸ்ரீ நரசிம்ஹ மந்திரத்தை உபதேசம் செய்துவிட்டுத் தன்
சீடரின் தலயில் தன் வலதுகையை வைத்து ஆசிதரும் போது திடீர் என்று கையை எடுத்து
விட்டுத் தன் இருகைகளாலும் சீடரை வணங்கினார். காரணம் தன் சீடனின்
உருவத்திற்குப் பதில் அங்கே ஸ்ரீ நரசிம்ஹ மூர்த்தியே அமர்ந்திருக்கக் கண்டார்.
இந்த அற்புத நிகழ்வையும் திரு. உமேஷ் தன் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்
என்றார்.
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும்
சிருங்கேரியிலும், அதன் பக்கத்து ஊர்களிலும் உள்ள பள்ளில் படிக்கும் மாணவ,
மாணவியர்களுக்கு மதிய உணவு வழங்கப் பட்டு வருகிறது. சுமார் இருபத்தி இரண்டு
பள்ளிகளுக்கு இந்த மதிய உணவு தொடர்ந்து இன்றும் வழங்கப் பட்டு வருகின்றது.
இதில் எந்த சாதி, மதமும் பார்ப்பது கிடையாது.
ஒரு முறை, ஒரு பக்தர்," நீங்கள் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு
உணவளிப்பது சந்தோஷம்தான். ஆனால் ஏன் சில கிறிஸ்தவப் பள்ளிக் குழந்தைகளுக்கும்
இதைச் செய்கிறீர்கள்? இந்துக் குழந்தைகளுக்கு மாத்திரம் இந்த மதிய உணவு
கொடுத்தால் போதாதா?" என்று கேட்க ," எல்லாக் குழந்தைகளும் ஒன்றுதானப்பா. இதில்
எந்த பேதமும் பார்க்கக் கூடாது." என்றாராம் ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகான்"
என்றார் திரு. பத்மநாபன்.
கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் பேசும் பொழுது, சிருங்கேரி
குருநாதர்களின் அருட்பெருமைகளை எடுத்துரைத்தார். ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த
மகாஸ்வாமிகள் விவசாயத்தை மிகவும் ஊக்குவிப்பவர். அதற்கு சிருங்கேரி ஸ்ரீ
சாரதா பீட வளாகத்தில் இருக்கும் அருமையான தோட்டங்களும், மா, பலா, தென்னை போன்ற
மரங்களுமே நேரடி சாட்சி என்றார். சுவாமிகள் பறவைகளையும், விலங்குகளையும்
மிகவும் நேசித்தார். அவைகளிடம் அன்பு காட்டினால் நமக்குத் தானாகவே
மனிதர்களிடம் அன்பு கூடி விடும் என்பார் சுவாமிகள் என்றார்.
சிருங்கேரி ஆச்சார்யார்கள் ஒரு பொழுதும் அரசியல் பேச மாட்டார்கள்.
அவர்கள் தவ வாழ்வில்தான் தங்களைக் கரைத்துக் கொள்வார்கள்.அப்படி இருந்தாலும்
ஒரே ஒரு முறை நம் தேசத்திற்காகக் குரல் கொடுத்தார். அது, நமது அண்டைநாடான சீனா
நம் பாரத தேசத்தின் மீது போர் தொடுத்த நேரம். "மக்களில் உடல் வலுவுள்ளவர்கள்
போர்க்களத்திலும், பணம் வசதி பெற்றவர்கள் நிறையப் பொருளுதவியை நம்
அரசாங்கத்திற்கும் செய்து , எதிரியை வீழ்த்த உதவ வேண்டும். இதில் எல்லோரும்
இணைந்திருக்க வேண்டும் " என்று அறிக்கையே கொடுத்தார் ஸ்ரீ அபிநவ வித்யா
தீர்த்தர் என்றார் கீழாம்பூர்.
சிறந்த கலைஞர்கள், விஞ்ஞானியர்கள், போர்வீரர்கள், தேசத்திற்காகத்
தொண்டு செய்தோர்கள் அனைவருக்கும் விருதுகள் வழங்குபவர் இந்திய ஜனாதிபதி.
அப்படி நமது தேசத்தின் முதல் ஜனாதிபதியான "ஸ்ரீ பாபு ராஜேந்திர பிரசாத்"
அவர்களுக்கு "ராஷ்ட்ரபதி ரத்னா" என்ற விருதை அளித்தார். அதுவும் சென்னையில்
நடந்த நிகழ்ச்சி ஒன்றில். அந்த விருதை ஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த
மகாஸ்வாமிகளிடம் மிகுந்த பக்தியுடன் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி,"இந்த விருதை
எங்கள் (ஜனாதிபதி) பரம்பரைக்கேன்றே என்று எண்ணிப் பெற்றுக் கொள்கிறேன்"
என்றாராம்.
குருநாதர்களின் பெருமைகளை யார் கூறினாலும் நம் செவிகள் குளிர, மனம் உயர,
கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை ஏற்பாடு
செய்த "தேஜஸ் பவுண்டஷன்" அமைப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
கவித்துவமாக இணைப்புரை வழங்கிய நாடக ஆசிரியர் திரு.சந்திர மோகன் அவர்களுக்குத்
தனிப் பாராட்டுகள்.
திரு. கோவிந்தராஜன் நன்றி கூற விழா நிறைவடைந்தது.
அன்பன்,
மீ.விசுவநாதன்
09.10.2017 01.16 am
More information about the Advaita-l mailing list